தமிழக அரசியல்

ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவரா  இல்லையா?

Share

 ஆளுநர் மாளிகை ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் ஏழு பேர் விடுதலை குறித்து தவறான தகவல் கொண்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக  அனுப்பி வைக்கப்படுகிறது என்ற ஒரு செய்தி வருகிறது. அடுத்த நாளே அந்த செய்தி மறுக்கப்பட்டு ஆளுநர் படித்துக் கொண்டிருக்கிறார் என்று வருகிறது. பத்திரிகைகள் எப்படி அந்த தவறான செய்தியை வெளியிட்டன? அதற்கு காரணமானவர்கள் யார்?

அது ஒருபுறம் இருக்கட்டும் ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவரா  இல்லையா? அரசியல் சட்டப் பிரிவு 161 மாநில அரசின் தனி உரிமையா  இல்லையா? ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் ஏதேனும் இருக்கிறதா? உச்ச நீதிமன்றம்   ஆளுநர் தீர்மானிக்கட்டும் என்று சொன்னது தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தை குறித்ததாக இல்லையா?

நாளை ஆளுநர் இதர எல்லா பிரச்சனைகளிலும் மாநில அமைச்சரவை முடிவுகளை இதேபோல நான் மத்திய அரசை கேட்டு முடிவெடுக்கிறேன் என்று சொன்னால்  குழப்பம் வராதா? அரசியல் சட்ட பிரிவுகள் 161  32 72 எல்லாம் தனித்தனி அதிகாரம் உள்ளது. ஒன்றை சார்ந்து மற்றொன்று இல்லை

நாளையே ஆளுநர் மாநில அரசின் பரிந்துரையை ஏற்கவில்லை என்றோ இந்தியர்களுக்கு ஒரு முடிவாகவும் இலங்கை தமிழர்களுக்கு ஒரு முடிவாகவும் எடுத்தாலும் எதிர்காலத்தில் அது புதிய பிரச்சனைகளுக்கு வித்திடும் ராஜீவ் காந்தியோடு கொல்லப்பட்ட இதர தமிழர்கள் இதுதொடர்பாக ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்து சொல்ல முனைவது இப்போதைய பிரச்சினைக்கு தேவையற்றது.

குற்றவாளிகளா தண்டிக்கப்பட வேண்டியவர்களா என்பதை தாண்டி குற்றவாளிகள்தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் என ஒப்புக்கொண்டு அவர்களும் 27 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த பிறகு ஆயுள் தண்டனை என்பது குறிப்பிட்ட காலம் வரையிலுமா அல்லது இறக்கும் வரையிலுமா என்பதையும் தாண்டி இப்போதைய ஒரே கேள்வி தண்டனையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா இல்லையா என்பது மட்டுமே.

அரசியல் சட்டம் மாநில அரசுக்கு தந்திருக்கும்  உரிமையை விவாத பொருள்  ஆக்குபவர்கள் நாட்டுக்கு நல்லது செய்பவர்கள் ஆக மாட்டார்கள் ஆளுநர் அலுவலக குறிப்பு கவலை அளிக்கக் கூடியது இந்த பிரச்சனை சிக்கலான ஒன்று என்பது எப்படி சரியாகும்? இதில் இனிமேல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் என்ன? தேவைப்படும் ஆலோசனைகள் பெறப்படும் என்று சொல்லியிருப்பது பற்றி யாருடைய ஆலோசனை என்று தெளிவுபடுத்தப்பட வேண்டாமா ? நியாயமான முடிவு எடுக்கப்படும் என்றால் அமைச்சரவை பரிந்துரை நியாயமானது இல்லையா?

ஆளுநர் மாளிகை அறிவிப்பு குழப்பங்களைத் தான் அதிகப்படுத்துகின்றது. ஆளுனர் அவர்களே தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பில்லாதது தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி

This website uses cookies.