விமான நிலையம், தன் வீட்டு கேட் இரண்டும்தான் ரஜினிகாந்த் அரசியல் கருத்துக்கள் உதிர்க்கும் இடங்கள் .
ஒரு அரைமணிநேரம் செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுயமாக சிந்தித்து பதில் அளித்து விட்டால் அதற்குப் பின் நாம் அவரை அரசியல் தகுதிக்கு எடை போடலாம். மங்கி அல்ல என்பதை நிரூபிக்கலாம்.
ஏதோ வரும்போது போகும்போது இரண்டொரு வார்த்தைகளை சொல்லி விட்டால் அதற்கு ஆயிரம் விளக்கங்கள் கொடுத்து பொழிப்புரை தருவதா ஊடகங்கள் வேலை?
ஒரு மனிதன் திரை உலகத்தில் சாதித்த சாதனைகள் காரணமாக மக்கள் கொண்டாடினால் அதற்கு பிரதி பலனாக அவர்கள் தலையில் உட்கார்ந்து மிளகாய் அரைப்பதா?
பாஜக செல்வாக்கு இழக்கிறது என்பதை அறிந்து தன்னை அதனோடு இணைத்து பேசுவதை விரும்பாத ரஜினி பாஜக அரசுக்கு எதிராக பேசுவதற்கு மட்டும் நிரம்பவும் கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்கிறார். சங்கி என்ற ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் என்ற முத்திரையை ரஜினியால் விலக்க முடியவில்லை. குருமூர்த்தியின் ஆலோசனைகளை இவர் கேட்கும் வரை இந்த முத்திரை அழியாது.
இப்போதும் கூட வன்முறையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ராஜினாமா செய்து விட்டுப் போங்கள் என்று சொல்லும் ரஜினி குடிஉரிமை திருத்த சட்டத்தை அவர்கள் திரும்ப வாங்க மாட்டார்கள் என்று சொல்கிறார். என்ன போராட்டம் செய்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை என்கிறார்.
என்ன சொல்கிறார் இவர்? போராட்டம் சரி என்கிறாரா சட்டம் சரி என்கிறாரா?
சட்டத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் போராடத்தான் செய்வார்கள். பிரிட்டிஷ் காரன் போட்ட சட்டத்தை எல்லாம் நாம் ஏற்றுக் கொண்டோமா? அது அந்நியன் போட்ட சட்டம். இது நமக்கு நாமே போட்டுக் கொண்ட சட்டம். இது செல்லும் என்று இன்னமும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்ல வில்லையே? போராடும் உரிமையை அரசியல் சட்டம் தந்திருக்கிறது. அதை அரசே நினைத்தாலும் பறிக்க முடியாது.
உளவுத்துறையின் தோல்வி என்று சொல்லும் ரஜினி இவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிறார். எதைக் கிள்ளி எறிய வேண்டும் என்பதில்தான் தெளிவில்லை.
போராட்டத்தை ஒழுங்கு படுத்துங்கள். நீதிமன்ற கண்காணிப்பில் நடவடிக்கை எடுங்கள்.
35 பேர் இதுவரை மாண்டிருக்கிரர்கள். இப்போதைக்கு போராட்டங்கள் முடிகிற காட்சி தெரியவில்லை. என்ன செய்ய போகிறார்கள் ஆட்சியாளர்கள்?
மோடியின் குஜராத் மாடல் அரசு மத்திய அரசுக்கு மாறிவிட்டது என்பதை தானே காட்சிகள் காட்டுகின்றன. முன்பு கோத்ரா. இப்போது டெல்லி. நாளை..?
தன்னை பாஜகவின் ஊதுகுழல் என்று சொல்வதற்கு வருந்தும் ரஜினி பாஜக மதவாத அரசியல் நடத்துகிறது என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்.
குடிமக்கள் பதிவேட்டை அமுல்படுத்த போவதில்லை என்றால் சட்டம் ஏன்? திரும்ப பெற வேண்டியதுதானே?
அமுல்படுத்த முடியாத ஒரு சட்டம் நமக்கெதற்கு?
இரும்பு கரம் கொண்டு மத்திய அரசு இதை அடக்க வேண்டும் என்கிறார் ரஜினி? எதை? அரசுக்கு எதிரான போராட்டத்தையா? அந்த போராட்டத்தை ஒடுக்க முனையும் பாஜக ஆதரவு கலவரக்காரர்களையா?
கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிய சொன்ன டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் இரவோடிரவாக பஞ்சாப் அரியானா உயர்நீதி மன்றத்திற்கு இட மாற்றம் செய்யப் படுகிறார்.
கொலிஜியம் செய்த பரிந்துரைப்படி இடமாற்றம் இதில் அரசியல் இல்லை என்கிறார் சட்ட அமைச்சர். நம்பத்தான் ஆளில்லை!
மத்திய அரசுக்கு எதிராக ரஜினி பேசி விட்டார் என்று சொல்ல ஊடகங்கள் முயற்சித்தாலும் அவரது சொற்கள் நேரெதிர் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாக புலப்படுகிறது.
கொசுறு; ரஜினியின் இந்த நிலைப்பாட்டை வரவேற்று பேசிய கமல் ரஜினிக்கு ஒரு இடைக்குத்தும் கொடுத்திருக்கிறார். ‘சபாஷ் நண்பர் ரஜினி அவர்களே.. அப்படி வாங்க.. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல. ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை..” என்று சொல்லி இருக்கிறார்.
அதாவது இனிமேல் ரஜினி ‘ என் வழி தனி வழி’ என்று சொல்ல முடியாதாம். சினிமாக்காரங்க நல்லாத்தான் நடிக்கிறான் கப்பா!!!
This website uses cookies.