அம்ருதா என்ற பெண் தான் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி ஜெயலலிதாவின் உடலை வெளியில் எடுத்து டி என் ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வைஷ்ணவ அய்யங்கார் மரபுபடி எரியூட்ட வேண்டும் என்றும் கோரி உச்சநீதி மன்றத்தில் மனுப்போட்டு அது தள்ளுபடியாகி விட்டது. ஆனால் அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்று சொல்லி இருப்பதால் பிரச்னை முடியப் போவதில்லை.
ஜெயலலிதாவின் அப்பா ஜெயராமின் தங்கை ஜெய்சிகாவின் மகள் லலிதா ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது உண்மைதான் என்றும் தனது பெரியம்மா தான் பிரசவம் பார்த்தார் என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார். வெளியே சொல்லக் கூடாது என்று சத்தியம் வேறு வாங்கியதாக வும் சொல்கிறார்.
1990 ல் நக்கீரன் பத்திரிகை ஷோபனா வேதவல்லி என்ற குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டு அவர்தான் ஜெயலலிதாவின் மகள் என்று கட்டுரை வெளியிட்டது. நூற்றுக்கணக்கான அவதூறு வழக்குகளை நக்கீரன் மீதுபோட்ட ஜெயலலிதா இந்த கட்டுரைக்காக நக்கீரன் மீது வழக்கு ஏதும் போடவில்லை என்பது புரியாத புதிர்.
அம்ருதா மீது வழக்கு தொடருவேன் என்று தீபா பேட்டி கொடுக்கிறார்.
சொத்துக் காகவா உரிமைக்காகவா என்பது போக போகத்தான் தெரியும்.
பிரபலமானவர்கள் மீது அவர்கள் மறைந்த பிறகு உரிமை கொண்டாடுவது என்பது வேறு சேற்றை வாரி இறைப்பது என்பது வேறு. இரண்டில் எது உண்மை என்பதை கண்டுபிடித்து போது மக்களுக்கு சொல்லும் கடமை காவல் துறைக்கு உள்ளது. தவறாக உரிமை கொண்டாடி இருந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக குற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டாக வேண்டும். உண்மையாக இருந்தால் அதையும் மக்களுக்கு சொல்லியாக வேண்டும்.
உச்சநீதி மன்றம் கூட இதை உயர்நீதி மன்றத்துக்கு தள்ளி விட்டிருக்காமல் தானே விசாரித்திருக்கலாமோ என்று கூட தோன்றுகிறது. அல்லது வழக்கை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி இருக்கலாம்.
எல்லாம் தெரிந்த ஜெயலலிதா தன் சொத்துக்கள் பற்றி ஒரு உயில் கூட எழுதாமல் விட்டிருப்பார் என்று நினைக்கக் கூட முடியவில்லை.
இறந்த பின் ஒருவரை இழுக்கு உண்டாகும் படி நடவடிக்கைக்கு உள்ளாக்கு வது அறமல்ல. ஆனால் ஜெயலலிதா சாதாரண மானவர் அல்ல.
கோடிக்கணக்கான சொத்துக்களை விட்டு சென்றிருப்பவர். அதற்கான உண்மை வாரிசுகள் யார் என்பது பற்றி ஒரு விசாரணை நடத்தி கண்டு பிடிப்பது நியாயம் தானே. ?
அதுவும் முரண்பாடான செய்திகள் உலவி வரும் நிலையில் காவல் துறை கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதும் அவர் பெயரில் ஆட்சி செய்பவர்கள் ஏதும் அறியாதது போல் மெளனமாக இருப்பதும் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தாதா?