மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் ஒரு மயில் தன் அலகுகளில்
ஒரு மலரை கௌவிக் கொண்டு காட்சி தருவதுதான் கதை.
ஆனால் இப்போது இருப்பதோ மயிலின் அலகுகளில் ஒரு பாம்பு.
எனவே இது திருடப் பட்ட சிலையின் மாற்று என்றும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி
புகார் கொடுக்கப் பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாகத்தான் டி வி எஸ் சுந்தரம் அய்யங்காரின் பேரன்
வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரி மனுப் போட்டதை நாம் எழுதியிருக்கிறோம்.
இப்போது ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கோர்ட்டில் வழக்கு போட்டு
அறங்காவலர்கள் செயல் அதிகாரிகளை நீக்கி விட்டு
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆகம வல்லுனர்களையும் சட்ட வல்லுனர்களையும் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் என்றும் கோரினார்.
நீதிபதிகள் மகாதேவன் ஆதிகேசவலு கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் போது கேட்டார்கள்
‘ ஏன் சிலை மாயமானது சிலை மாறிவிட்டது என்று
அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்ல?
அது அர்ச்சகர்களின் கடமை இல்லையா?
இப்போது எல்லாம் அர்ச்சகர்கள் எந்திரத் தனமாக செயல் படுகின்றார்களே தவிர
தெய்வீக பணி ஆற்றுவதில்லை . வேதனையாக இருக்கிறது ‘
என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.
அரசு வழக்கறிஞர் இது தொடர்பாக விசாரித்துக் கொண்டு இருக்கிறோம்
என்று சொன்னதால் அறநிலையத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு
விசாரணை தேதியை மாற்றி இருக்கிறார்கள்.
நீதிபதிகள் கேட்ட இந்த கேள்விகளை இந்த வழக்குக்கு மட்டும் அல்ல
சிலை கடத்தல் புகார் நிலுவையில் இருக்கிற
அத்துணை வழக்குகளிலும் கேட்கப் பட வேண்டும்.
வழிபாடு செய்வோர் கோவிலுக்கு செல்கிறார்களோ இல்லையோ
அர்ச்சகர்கள் அனுதினமும் கோவிலுக்கு சென்று
தொண்டு செய்கிறவர்கள். வேறு பணி இல்லாதவர்கள்.
அவர்களுக்கு மட்டுமே கோவிலின் அத்துணை அம்சங்களும் அத்துபடி.
இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குத் தெரியாமல்
\ கோவிலில் அணுவும் அசைய முடியாது.
அப்படி இருக்கும்போது கோவிலில் சிலைகளோ ஆபரணங்களோ
காணாமல் போனால் அவர்களுக்கு தெரியாமல் எப்படி இருக்கும். ?
அதுவும் அல்லாமல் இதை சாக்காக வைத்து எப்படியாவது
கோவில் நிர்வாகத்தை கைப்பற்றுவது மட்டுமே அவர்களின்
நோக்கமாக இருக்கிறது. இவர்களின் நோக்கத்தைத் தான்
மனுப் போட்ட ஸ்ரீரங்கம் நரசிம்மன் பிரதிபலிக்கிறார்.
கோவில் சிலைகளுக்கும் ஆபரணங்களுக்கும் கோவில் அர்ச்சகர்களும்
சேர்ந்து பொறுப்பேற்க வேண்டும் என்று சட்ட திருத்தம் செய்வதை
ஆலோசிக்க வேண்டும். எப்போது நகைகள் பயன்படுத்த வேண்டும்
என்பதை அவர்கள் தானே தீர்மானிக்கிறார்கள்.
அதுவே சரியான தீர்வு.