சிலை கடத்தல் வழக்குகளை சி பி ஐ வசம் ஒப்படைக்க எடப்பாடியின் அரசு அரசாணை பிறப்பித்திருப்பது ஆச்சரியமில்லை.
தொடர்ந்து அவரை இந்த துறையிலிருந்து விரட்ட அரசு முயற்சித்து உச்ச நீதி மன்றத்தின் தலையீட்டால் அவர் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வருகிறார்.
திடீரென்று அவர் அறநிலையத்துறை துணை ஆணையர் கவிதாவை காஞ்சிபுரம் கோவில் சிலையில் தங்கம் கலக்காமல் மோசடி செய்த வழக்கில் கைது செய்ததும் பிரச்னை சூடு பிடித்தது.
பதவி ஏற்றதும் காணாமல் போன 250 கோவில் சிலைகளை மாணிக்கவேல் மீட்டிருக்கிறார்.
உயர்நீதி மன்றம் 21.07.2017 அன்று பல உத்தரவுகளை பிறப்பித்து விசாரணை நடைபெற கோரிய நேரத்தில் அவைகளில் பெரும்பான்மை உத்தரவுகளை அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவது பற்றி எந்த விளக்கமும் இல்லை.
கவிதா தான் கமிஷனர் சொன்னதை தான் செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வருகின்றன.
அடுத்து அடுத்து எந்த அதிகாரி அல்லது அரசியல்வாதி மாட்டுவாரோ என்ற நிலையில் அரசு ஏன் இந்த திடீர் முடிவை எடுக்க வேண்டும்?
எதிர்காலத்தில் வரும் வழக்குகளையும் சி பி ஐ விசாரிக்கும் என்றால் சிலை தடுப்பு பிரிவே தேவையில்லையா?
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கும் குட்கா வழக்கிற்கும் சி பி ஐ விசாரணை வேண்டும் என்றால் மறுக்கும் எடப்பாடியின் அரசு சிலை கடத்தல் வழக்குகளை மட்டும் மாற்றத் துடிப்பது ஏன்?
பொன். மாணிக்கவேல் வரும் நவம்பர் மாதத்தில் ஒய்வு பெறுகிறார். அதுவரை விசாரணையை கிடப்பில் போட்டால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற திட்டமே காரணம் என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
ஏனென்றால் சி பி ஐ உடனே எடுத்து விசாரிக்க முடியாது. சி பி ஐ ஏற்கனெவே ஆட்கள் பற்றாக் குறையால் தத்தளித்து வருகிறது.
மொத்தம 7274 அதிகாரிகள். அதில் 1594 காலியிடங்கள் நிரப்பப் படவில்லை. வருடத்திற்கு 700 – 1000 கிரிமினல் வழக்குகளையே சி பி ஐ ஆல் கையாள முடியும்.
கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட்டதால் நீதி மன்றம் தலையிடாது என்று திட்டமிட்டு இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது.
ஆனால் முன்பே நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடை பெறுவதால் இந்த வழக்கு விசாரணையை சி பி ஐ க்கு நீதிமன்றம் மாற்றும் வாய்ப்புகள் குறைவு.
அரசு பல்டி அடித்து நடப்பு வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவே விசாரிக்கட்டும் என்று சொல்லலாம் .
எது நடந்தாலும் இந்த அரசு யாரையோ காப்பாற்ற முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டில் இருந்து மீள முடியாது.
ராம கோபாலன் சி பி ஐ வேண்டாம் என்கிறார். ஆனால் கி வீரமணி சி பி ஐ வேண்டும் என்கிறார்.
அரசை , அறநிலையத்துறை யை ஆலயத்தை விட்டு விரட்ட நினைப்பவர்கள் பார்ப்பனர்கள்.
ஏனென்றால் அப்போதுதான் அவர்கள் ஆட்சி ஆலயத்துக்குள் முழுமையாகும். இதுவரை அதற்கு இடம் கொடாமல் இருந்த ஆட்சியாளர்கள்
சிலை கடத்தல் வழக்குகளை வெற்றிகரமாக நடத்தா விட்டால்
அதையே சாக்காக வைத்து அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு
என்ற கூச்சலை மீண்டும் எழுப்புவார்கள் பார்ப்பனர்கள்
போராடி பெற்ற உரிமைகளை இந்த ஊழல் ஆட்சியாளர்களால்
இழந்து விடுவோமோ என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
நீதிமன்றம் அதற்கு இடம் தராது என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்!!