20 தொகுதிகளை காலியாக வைத்துகொண்டு இங்கு ஒரு ஆட்சி நடக்கிறது. இது எப்படி மக்களாட்சி ஆகும்.?
எல்லாருக்கும் தெரிந்தே ஒரு மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.
மோடியின் மத்திய அரசு எப்போது விரும்புகிறதோ அப்போதுதான் தேர்தல் வரும் .
என்ன விசித்திரங்கள்?! காரணம் சட்டமோ நீதிமன்றமோ நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் இன்று ஆட்சியில் பங்குதாரர்கள். அப்படி வாக்களிக்காதவர்கள் சட்ட மன்றத்துக்கு வெளியே.
குறை ஒன்று சட்டத்தில். அல்லது நீதி மன்றத்தில். பாதிப்புக்கு உள்ளாவது மக்களாட்சி.
ஒரே ஒரு நாடாளுமன்ற கூட்டத்தில்தான் கலந்து கொள்ள முடியும் இப்போது கர்நாடகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் தேர்தெடுக்கப்பட்டிருக்கிற மூன்று உறுப்பினர்கள். ஏன் இடைதேர்தல் நடத்தினார்கள்? நான்கு மாத காலத்திற்கு ஒரு எம்.பி யா?
ஆர்.கே.நகர் திருப்பரங்குன்றம் தொகுதிகள் பற்றி வழக்கு இருக்கிறது. அதை எப்போது நடத்துவீர்கள் என்று உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியிருகிறது.
மற்ற 18 தொகுதிகள் பற்றி நீதிமன்றம் கேட்க முடியாது. ஏன் என்றால் தகுதி நீக்கம் செய்யப் பட்ட தினகரன் அணியை சேர்ந்த 18 பேரின் தகுதி இழப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றம் போகப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்களே தவிர அதை தேர்தல் கமிஷன் கருத்தில் எடுத்துக் கொள்ளுமா என்பதில் தெளிவில்லை.
அவர்கள் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார்களே தவிர தேர்தல் கமிஷனுக்கு தகவல் கொடுத்தார்களா என்பதும் தெரியவில்லை. 18 பெரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனிடம் கடிதம் கொடுத்தால் தவிர பத்திரிகை செய்திகளை அடிப்படியாக வைத்து அவர்கள் ஒரு முடிவு எடுக்க மாட்டார்கள். ஏன் என்றால் தேர்தல் கமிஷன் அப்பீல் காலக்கெடு இன்னும் 90 நாட்கள் என்றால் அதுவரை பொறுத்திருப்போம் என்பார்கள். ஏன் தினகரன் அப்படி தகவல் கொடுக்காமல் இருக்கிறார்? அவருக்கும் இடைதேர்தலில் தீவிர அக்கறை இல்லை. வந்தால் வெற்றி பெறுவோம் என்று சொல்லிக்கொண்டே தொண்டர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் அல்லவா?
யாராவது ஒரு தகுதி இழப்பு செய்யப் பட்ட எம்.எல்.ஏ உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தால் இடைத்தேர்தல் வராது.
எடப்பாடி பழனிசாமி அரசு நிம்மதியாக மிச்ச காலத்தை ஒட்டி விடும்.
நாடாளுமன்ற தேர்தலில் தான் பாஜக அரசுக்கு கவலை. இங்கே எடப்பாடி ஆண்டால் என்ன வேறு யார் வந்தால் என்ன? இன்றைய நிலையில் அரசு கவிழ்ந்தால் திமுக வந்து விடும் மு.க.ஸ்டாலின் வந்து விடுவார் என்றால் எப்படி இடைத்தேர்தலை நடத்துவார்கள்?
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் நாங்கள் பாஜக வோடு கூட்டணி வைத்தால் என்ன தவறு என்று கேட்கிறார். விதை போட்டாகி விட்டது அல்லவா?
ரஜினி பாஜக-வை பலசாலி கட்சி என்கிறார். கூட்டணி சேருவீர்களா என்றால் வரட்டும் பார்க்கலாம் என்கிறார். இல்லை என்று சொல்ல நா வரவில்லை. ஏன் என்றால் மனதில் காவி இருக்கிறதே?!
ஆக எடப்பாடி-ரஜினி- பாஜக கூட்டை உறுதி செய்தபின் தான் தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல்களை நடத்த மோடி – அமித்ஷா அனுமதிப்பார்கள் .
என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ன? ஏன் என்றால் சதிகள் என்றும் வெற்றி பெற்றதில்லை.