ஜெயலலிதா உயிருடன் இருந்த போது ஏன் தீர்ப்பு சொல்லவில்லை?. அவர் இறந்தபின் சொல்லி என்ன பயன் விளைந்தது என்று உச்ச நீதி மன்ற மூத்த நீதிபதி சலமேச்வர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அவர் இன்னும் சில மாதங்களில் ஒய்வு பெற போகிறவர்.
தலைமை நீதிபதி மிஸ்ரா தன்னிச்சையாக வழக்குகளை ஒதுக்குகிறார் என்று நான்கு மூத்த நீதிபதிகள் செய்தியாளர்களை கூட்டி குறைகளை பட்டியல் இட்டதில் இவர் பங்கு அதிகம்.
ஜெயலலிதா விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து செய்யபட்ட மேன்முறையீடு முதலில் பி கே கோஷ் மற்றும் ஆர் கே அகர்வால் அமர்வில் தான் இருந்தது. திடீர் என்று அகர்வால் மாற்றப் பட்டு அவருக்கு பதிலாக அமிதாவா ராய் நியமிக்கப் பட்டார். இவர்தான் சசிகலாவுக்கு எதிராக பலமான தீர்ப்பை எழுதியவர்.
07.06.2016 தேதியில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முடிவுற்று தீர்ப்புக்கு என்று வழக்கு ஒத்தி வைக்கப் படுகிறது.
05.12.2016 ல் ஜெயலலிதா மரணம் அடைகிறார். அதுவரையில் தீர்ப்பு சொல்லப் பட வில்லை.
14.02.2017 ல் திடீர் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்கிறது. அதுவும் சசிகலா தான் முதல்வர் பதவியை கோரி ஆளுனரை சந்தித்த பின் ஆளுநர் மும்பாயில் இருந்து வர மறுத்து உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்தபின் வருகிறார்.
பொதுவாக தீர்ப்புக்கு என்று வழக்கு ஒத்தி வைத்து விட்டால் குற்றவாளி உயிருடன் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவருடைய குற்றத் தன்மை பற்றிய முடிவு பாதிக்காது. உயிருடன் இல்லை என்பதால் சிறை தண்டணை வழங்க முடியாதே தவிர வேறு எந்த வகையிலும் வழக்கின் முடிவு பாதிக்காது.
ஆனால் ஜெயலலிதாவை பொறுத்த வரை அவருக்கு விதிக்கப் பட்ட நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை அவர் அனுபவிக்க முடியாதே தவிர அவருக்கு விதிக்கப் பட்ட அபராதம் நூறு கோடி மாற்றப் படவில்லை. எனவே அவரது சொத்துக்கள் ஏலம் விடப் பட்டு அந்த அபராதம் வசூலிக்கப் பட வேண்டும். அந்த நடவடிக்கை கள் என்ன வாகின? ஏன் தொடரவில்லை?
அந்த வழக்கின் நீதிபதி மாற்றப் பட்டது ; தீர்ப்பு சொல்லப் படாதது பற்றியெல்லாம் கேள்வி எழுப்புவது நாம் அல்ல. உச்ச நீதி மன்ற மூத்த நீதிபதி. எனவே சந்தேகம் வலுக்கிறது.
தண்டிக்கப் பட்ட குற்றவாளிகளில் மூவர் சிறையில். முதலாமானவர் பெயரில் அரசு மரியாதைகள் என்றால் எங்கே இருக்கிறது நீதி? இதை விட கோமாளித்தனம் இருக்க முடியுமா?
குற்றவாளிகள் அரசியல் கட்சிகளுக்கு தலைமை தாங்குவதை தடுக்க முடியாது என்று சமீபத்தில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.
லாலு பிரசாத் சிறையில் இருக்கிறார். அவரது கட்சி பா ஜ க வை தோற்கடித்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுகிறது. அது வேறு.
ஜெயலலிதா வழக்கு வேறு. இதில் எங்கோ தவறு நடந்திருக்கிறது.
அவர்களுக்கு என்றால் சட்டம் தானாக வளைந்து கொடுக்கும் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. எழுப்பியவர் நீதிபதி என்பதால்,
தீர்க்க வேண்டிய இடத்தில் இருப்பது உச்ச நீதி மன்றமே தான்.
This website uses cookies.