திமுக பொருளாளர் துரைமுருகன் மே மாதம் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தபிறகு எடப்பாடி ஆட்சி தூக்கி எறியப்படும் திமுக ஆட்சி மலரும் என்று பேசியிருக்கிறார்.
அதிமுக அமைச்சர் ஜெயகுமார் அதை மறுத்து இன்னும் இரண்டாண்டுகள் இந்த ஆட்சி தொடரும் என்றும் திமுகவின் கனவு நிறைவேறாது என்றும் பேசியிருக்கிறார்.
ஆட்சியை காக்க எடப்பாடி போராடுவதன் விளைவுதான் மூன்று எம் எல் ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை. அவருக்கே நம்பிக்கை இல்லாமல்தானே நடவடிக்கை எடுக்கிறார் தாமதமாக.
இப்போது எடப்பாடிக்கு இருக்கும் ஆதரவு வெறும் 109 உறுப்பினர்கள் மட்டுமே. எப்படியாவது பெரும்பான்மை நீடிக்க குறைந்தது 8 இடங்களில் ஆவது அவர் வெற்றி பெற வேண்டும். முடியுமா?
ஓட்டுக்கு ரூபாய் 2000 வீதம் கொடுத்துமே மக்கள் மாற்றி வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதிருப்தியின் அளவை சொல்லவும் வேண்டுமா?
உச்சநீதிமன்றம் 11 எம் எல் ஏக்கள் தகுதி இழப்பு வழக்கில் தீர்ப்பு சொல்லியாக வேண்டும். அதில் பாதகமாக வந்தால் ஈடு கட்ட எடப்பாடியிடம் எண்ணிக்கை இல்லை.
தினகரன் நாற்பது முதல் ஐம்பது லட்சம் வரை வாக்குகள் வாங்கிவிட்டால் கூட அணிமாற்றங்கள் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.
எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி அரசு தேறுவது கடினம்.