14 /02/2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கர்நாடக அரசின் மேல்முறையீட்டை அனுமதித்து உத்தரவிட்டது . நீதியரசர் குமாரசாமி அளித்த விடுதலை தீர்ப்பை ரத்து செய்து நீதியரசர் மைக்கேல் டி குன்ஹா அளித்த நான்காண்டு சிறை ஜெயலலிதாவுக்கு நூறு கோடி மற்றவர்களுக்கு தலா பத்து கோடி என்ற தண்டனை தீர்ப்பை உறுதி செய்தது.
அதே நேரத்தில் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் மீதான மேல்முறையீடு அற்றுப் போகிறது என்றும் உத்தரவிட்டது. அந்த இடத்தில்தான் குழப்பம் ஏற்பட்டது. ஜெயலலிதா இறந்தது 5/12/ 2016ல். அதற்கு முன்பே பல மாதங்களுக்கு முன்பே வாதங்கள் முடிந்து தீர்ப்புக்காக என்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டு விட்டது. வாதங்கள் முடிந்த நிலையில் குற்றவாளி ஒருவர் இறந்துவிட்டால் தீர்ப்பு சொல்லப்பட வேண்டும் . ஆனால் மேல்முறையீடு ஜெயலலிதாவை பொறுத்து அற்றுப் போனது என்று உச்சநீதி மன்றம் சொன்னது. அற்றுப் போனது சிறை தண்டனையா அபராதமா என்ற கேள்வி எழுந்ததால் இதை விளக்க கோரி கர்நாடக அரசு
மீளாய்வு மனு செய்தது.. அதுவும் 23/ 8/ 2017ல் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது .
அதன் காரணமாக கர்நாடக அரசு கியூரேட்டிவ் மனு செய்ய முடிவெடுத்தது .அதற்கு அடிப்படை இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும். ஒன்று இயற்கை நீதிக்கு முரணானது என்பது. இரண்டு நீதிபதிகள் பாரபட்சமாக இருந்தார்கள் என்பது. இரண்டாவது காரணம் சொல்லமுடியாது. எனவே முதல் காரணம் அடிப்படையில்தான் அந்த கியுரேடிவ் மனு விசாரிக்கப் பட வேண்டும். .
அதை விசாரித்த தீபக் மிஸ்ரா ரஞ்சன் கோகாய் , மதன் பி லோக்கூர் அடங்கிய பெஞ்ச் அதையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது . இந்த உத்தரவின் காரணமாக ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாய் அபராதத்தை அவரது சொத்துக்களில் இருந்து வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது . இது சரியா? நியாயமானதா?
முதல் குற்றவாளி ஜெயலலிதா . மற்ற மூன்று பேரும் அவருக்கு குற்றமிழைக்க துணை புரிந்தவர்கள் . இப்பொழுது தீர்ப்புக்குப் பிறகு என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், ஜெயலலிதா இறந்ததால் சிறை தண்டனை அனுபவிக்க முடியாமல் போனது என்பது சரி . ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்க முடியுமா முடியாதா என்பதுதான் கேள்வி .
தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்தன . காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அதுதொடர்பாக உத்தரவிடப்பட்டு நிலுவையில் இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இப்பொழுது உச்சநீதிமன்றம் இந்த கியூரேட்டிவ் மனுவை தள்ளுபடி செய்த பிறகு அதற்கு உயிர் இருக்குமா என்பது தெரியவில்லை.
இன்றைக்கு சிறையில் இருக்கிற இரண்டு முதல் நான்கு குற்றவாளிகளான சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோர் தலா 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதே நேரம் குன்ஹா அவர்களின் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் 4 பேரும் குற்றவாளிகள் ஆகின்றனர் அதில் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் தண்டனை அனுபவிக்க முடியாது என்பது வெளிப்படை. இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைக் அவருக்கு சொந்தமான சொத்துக்களிலிருந்து அரசு ஏன் வசூலிக்கக் கூடாது என்பதற்கு எந்த காரணமும் சொல்லப்படவில்லை.
அந்த அம்சத்தை தான் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்த தவறிவிட்டதாக நாம் கருதுகிறோம். ஜெயலலிதா சொத்தை பறிமுதல் செய்ய வில்லை என்றால் சிறையில் இருப்பவர்கள் மட்டும்தான் குற்றவாளிகள். இறந்துபோன ஜெயலலிதா குற்றவாளி அல்ல என்று ஆகிறது. அது தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பா? குற்றவாளிதான் என்றால் அபராதம் எப்படி அற்றுப்போகும்? சொத்துக்கள் இருக்கின்றனவே?
வாதம் முடிந்த நிலையில் இறந்ததை பொறுத்து “ Judgement subsequently pronounced will have the same force and effect as if the same was pronounced before the death of Jayalalitha. என்று விளக்கம் அளித்து இருப்பது மேலும் அபராதம் பற்றிய அம்சத்தை குழப்புகிறது. “ Order of confiscation of 6 companies by trial court is unexceptionable is hereby restored and would be construed to be an order of this court as well “ என்றும் விளக்கம் அளிதிருக்கிறார்கள்.
சட்டப்படி இதற்கு மேல் வேறு நடவடிக்கைகள் இருப்பதாக தெரியவில்லை. அப்படி எனில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பான நிலை என்ன என்பதைப்பற்றி நீதிமன்றம் தான் விளக்க வேண்டும் . அதாவது ஒருவர் வாதங்கள் முடிந்து தீர்ப்பு தேதி ஒதுக்கப்பட்ட நிலையில் இறந்தால் மேன்முறையீடு அற்றுப் போகும் என்றால் அது சிறை தண்டனையை பொறுத்தமட்டிலுமா அல்லது அபராதத்தை பொருத்தும் உள்ளடக்கியதா என்ற கேள்விக்கான விடை தெரியவில்லை.
இந்த குழப்பம் தீர்க்கப்படவில்லை என்றால் ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்றாகிவிடும். சசிகலாவும் மற்றவர்களும் மட்டும் தான் குற்றவாளிகள் துணை நின்றார்கள் என்று ஆகிவிடும். துணை நின்றவர்களுக்கு சிறை என்றால் முதல் குற்றவாளி அரசு ஊழியர் எப்படி நிரபராதி ஆவார். இந்த கேள்விக்கு தான் விடை தெரியவில்லை.
ஒருவேளை இந்த தீர்ப்பினால் ஜெயலலிதாவின் தனிப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்காது என்று ஆனால் , முதல் குற்றவாளியின் சொத்துக்கள் பறிமுதலுக்கு ஆளாகாமல் அவருக்குத் துணை நின்றவர்களின் சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்படும் ஒரு வழக்காக வினோதமான சாட்சியமாக, இந்த வழக்கு வரலாற்றில் ஒரு பாடமாக இருக்கும்.
தீர்ப்புக்கு ஒதுக்கப் பட்ட சில மாதங்களிலேயே தீர்ப்பு சொல்லப் பட்டிருந்தால் தமிழ்நாட்டின் வரலாறே மாறியிருக்கும். ஜெயலலிதா முதல்வராக அப்போது இருந்தார். ஆக முடிந்தது நீதியரசர் குமாரசாமியின் தவறான கூட்டுதல் கணக்கால். அதைத்தான் உச்சநீதிமன்றம் “ incorrect arithmatical calculation” என்று குறிப்பிட்டு இருந்தது. அதற்கு மேல் அவர்களால் அதை விமர்சிக்க முடியவில்லை. அவர் நோய் வாய்ப்பட்டு சிகிச்சையில் இருந்து மீள முடியாமல் மரணித்து அதற்கடுத்து யார் என்ற கேள்வி எழுந்து சசிகலா சட்ட மன்ற கட்சி தலைவராக உரிமை கோரியபின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து கொண்டு சென்னை வர காலம் தாழ்த்த , அப்போது வந்த தீர்ப்பு இது என்பதையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது.