இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி பேச வேண்டும் மோடி??!!

modi-srilanka-ltte
modi-srilanka-ltte

மோடி தனது வெளிநாட்டு பயணங்களை தொடங்கிவிட்டார்.

மாலத்தீவு சென்றவர் இதுவரை சீனா பக்கம் இருந்த அதிகார மையம் இந்தியா பக்கம் இனி திரும்பும் என்பதை உறுதி செய்திருக்கிறார். இது வரவேற்கத் தக்க விளைவு.

அதேபோல் இன்று இலங்கை செல்லும் பிரதமர் மோடி அதிபர் சிறிசேனாவுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

ஈஸ்டர் பண்டிகை போது பயங்கர வாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்க்கப்படாத இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை.

இந்திய இலங்கை உறவு என்பது வெறும் வர்த்தக ரீதியில் மட்டுமே இருக்க முடியாது.

ஏனென்றால் அங்குள்ள தமிழர்கள் இங்குள்ள தமிழர்களுடன் ரத்த உறவு கொண்டவர்கள். அதை மற்ற மாநிலத்தவர் அங்கீகரிப்பதில்லை என்பதுதான் துயரம். மத்திய அரசும் அதை ஒரு அம்சமாகவே பார்ப்பதில்லை.

ஆனால் இந்தியா முந்திய காலத்தில் மேலாண்மை செய்யப் போய் தமிழர்களுக்கு துயரங்களைத்தான் பரிசாக தந்திருக்கிறார்கள்.

எழுநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப் பட்டபோது அவர்களை தமிழர்களாகதான் பார்த்தார்களே தவிர இந்தியர்களாக பார்க்கவில்லை.

ஈழத்தில் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதை வேறு நாட்டு பிரச்னைஎன்று கைகழுவ பார்த்தார்களே தவிர மனித உரிமை மீறல்களாக கூட பார்க்கவில்லை.

வீடுகள் கட்டி கொடுக்கிறோம் கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்கிறோம் ஆனால் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வோம் என்பதெல்லாம் கண்துடைப்பு என்பது பாமரர்களுக்கு கூட தெரியும்.

விடுதலை புலிகள் போரிட்டு வீழ்ந்த கடைசி நேரம் வரை இந்தியா சொல்லிக்  கொண்டிருந்தது “இலங்கை இனப்பிரச்னைக்கு ராணுவ தேர்வு முடிவாகாது அரசியல் தீர்வே இறுதி.”. 

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாள் முதல் அரசியல் தீர்வைப்பற்றியே யாரும் பேசுவதில்லை.

மோடியிடம் ஓரளவு எதிர்பார்ப்பு  நிச்சயம் இருக்கிறது. அங்கு சென்று அரசியல் தீர்வு பற்றி பேசுவார் என்று நம்புகிறோம்.

ஏற்கெனெவே அங்கு முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை சிங்களர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டு எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் ராஜினாமா செய்யும் அளவுக்கு நிலைமை சீர்கேடடைந்துவிட்டது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட எல்லா நாடுகளும் ஒன்றுபற்று இணக்கமாக செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

பயங்கரவாதிகள் எல்லாருக்கும் மதம் என்பது ஒன்றும் இல்லை. மதத்தை அவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பயங்கரவாதிகள் மதங்களின் எதிரிகள்.

ஆனால் கெட்ட வேளையாக மதத்தில் அபிமானிப்பவர்களை பயங்கரவாதிகளை ஒழிப்பதில் சுணக்கம் காட்டுகிறார்கள்.

இலங்கையில் ஏறத்தாழ 46% வணிகம் இந்தியர்கள் கையில் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே இந்தியாவுக்கு இலங்கை ஒரு வணிக சந்தை. அங்கே வாழும் மக்களின் உரிமைகள் எல்லாம் இந்தியர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். இதுதான் இதுவரை இந்தியாவின் இலங்கை உறவின் அணுகுமுறையாக இருக்கிறது.

அது மாற வேண்டும். தன் நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிற தமிழர்கள் இலங்கையின் தமிழர்களுக்கு உறவாக இருப்பதால் இந்தியத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டிய இந்திய அரசு அவர்களை பிளவுபடுத்தி பார்ப்பதிலேயே அக்கறை செலுத்துகிறது.

பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு இது.

இவர் சொல்வதை சிங்களர்கள் கேட்பார்களா அல்லது நாங்கள் சீனா பக்கம் சாய்ந்து விடுவோம் என்று அச்சுறுத்துவார்களா என்பதை எல்லாம் மீறி நாம் சொல்வதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

நரேந்திரமோடி அரசியல் தீர்வு பற்றி பேசாவிட்டால் வேறு யார் பேச முடியும்.?

மோடி நம்பிக்கைத் தன்மையை பெறுவாரா இழப்பாரா?