ராஜீவ் கொலையை நியாயப் படுத்தி சீமான் பேசியது எழுவர் விடுதலைக்கு தடையாகுமா?

seeman
seeman

விக்கிரவாண்டி இடைதேர்தலில் சீமான் பேசும்போது ‘ஆமாம் நாங்கள்தான் ராஜிவை கொன்றோம். எங்கள் இனத்தை அழித்த குற்றத்துக்கு எங்கள் மண்ணில் தண்டனை கொடுத்தோம்’ என்று பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

 அது உண்மையாக இருந்தால் சீமான் பெருந் தவறை செய்திருக்கிறார்.            பேசியது சட்டப்படி குற்றமா என்பதெல்லாம் இருக்கட்டும்.

இப்படி பேசுவது எழுவர் விடுதலையில் சிக்கலை உருவாகும் என்பது அவருக்கு தெரியாதா?

விடுதலைப் புலிகள் இன்னமும் இருக்கிறார்கள். மீண்டும் எழ முயற்சிக்கிறார்கள்.  என்றெல்லாம் குற்றம் சுமத்தி இந்திய அரசு, இல்லாத விடுதலை புலிகள் மீதான தடையை இன்னமும் நீடித்துக் கொண்டு இருக்கிறது. 

ராஜிவ் காந்தி இலங்கைப் பிரச்னையைக் கையாண்டது மிகப் பெரிய ராஜதந்திர பிழை.

அமைதிப் படையை ஏன் அனுப்பினோம்? யாரைப் பாதுகாக்க? அமைதியை நிலைநாட்ட என்று சொல்லி உள்ளே நுழைந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டதை யாருமே வரவேற்க வில்லை. அது மிகப் பெரிய தாக்கத்தை, இந்தியாவுக்கு எதிரான தாக்கத்தை உருவாக்கியது என்பதை மறுக்க முடியுமா?

 தமிழர்களும் சிங்களர்களும் செய்து கொள்ள வேண்டிய ஒப்பந்தத்தை இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்டது ஏன்?

அதனால்தான் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் மு கருணாநிதி திரும்பி வந்த இந்திய அமைதிப் படையை வரவேற்க செல்ல மறுத்து விட்டார். அப்போது யாராவது ராஜ துரோகம் என்று குற்றம் சாட்டினார்களா?

என் இனத்தை சுட்டுக் கொன்றவர்களை வரவேற்க மாட்டேன் என்றார் கலைஞர்.

இந்தியா ஈழத் தமிழர்களுக்கு நியாயம் பெற்றுத் தந்ததா, இல்லை அவர்களை வஞ்சித்து விட்டதா என்பது பற்றி கருத்து வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன.

அதெல்லாம் இருக்கட்டும், ராஜீவ் காந்தி செய்தது எல்லாம் தவறுதான்.  வரலாற்றுத் தவறுதான்.

                      அதற்காக அவரை நம் மண்ணில் கொலை செய்ததை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

                      பழி வாங்கல் தமிழ் மண்ணின் பண்பாடா? 

விடுதலைப் புலிகள் கோழைகள் அல்ல.    ராஜீவ் காந்தி கொலைக்கு புலிகள் பொறுப்பேற்கவில்லை.

அது ஒரு துன்பியல் சம்பவம் என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு.

சர்வதேச சதியே ராஜீவ் கொலைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு இன்னமும் அப்படியே இருக்கிறது.

விடுதலைப் புலிகள் அவர்கள் மண்ணில் வீரம் செறிந்த போரை நடத்தினார்கள்.    பிரபாகரன் தமிழ் இனத்தின் தவப்புதல்வன். தமிழர் அனைவரும் கொண்டாடவேண்டிய தலைவன். போர் தர்மத்தை கடைபிடித்து இறுதிவரை  போரிட்டு வீழ்ந்த போராளி. சிங்கள பொதுமக்களுடன் விடுதலைப் புலிகள் போரிட்டதே இல்லை. 

இத்தகைய மாபெரும் வீரனுக்கு ராஜீவ் கொலை தந்தது புகழா களங்கமா என்பதை வரலாறுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ராஜீவ் கொலை பற்றிய மர்மங்கள் இன்னும் அவிழ்க்கப் பட வில்லை.

சந்திராசாமி மறைந்து விட்டார். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைந்து விட்டார்.  சு.சாமி பரமசிவன் கழுத்தில் இருக்கம் பாம்பைப் போல் இருக்கிறார்.

உண்மைகள் வெளி வருமா என்பதே தெரியவில்லை.

இந்நிலையில் சீமான் பேச்சு பிரச்னையை இன்னமும் சிக்கலாக்குகிறது. இவர் தலைவர் ஆவதற்கு ஈழத் தமிழர் விலை கொடுக்க வேண்டுமா?

நாங்கள் கொன்றோம் என்றோம் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவரா? அதன் தலைவரை நேரில் பார்த்து வந்து விட்டால் நீங்களும் புலிகளாகி விடுவீர்களா?

சீமான் பேசியது சட்டப்படி குற்றமா என்பதை காவல் துறையும் நீதிமன்றமும் தீர்மானிக்கட்டும்.

காங்கிரசாரும் இதை பெரிது படுத்துவது பாஜக வுக்குத்தான் கொண்டாட்டமாக இருக்கும்.