இலங்கை பிரச்னையில் இப்போது இந்திய தமிழ் ஊடகங்கள் சிறிசேன-ரணில் விக்ரமசிங்கே பதவி சண்டையை மையப் படுத்தி எழுத தொடங்கிவிட்டன.
எத்தனை வீழ்ச்சி! சிங்களர் சண்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். முடிவடைகிற அரசியலா அது? அதனால் தமிழர் பிரச்னை எப்படி தீரும்?
போர் முடிந்து விடுதலை புலிகள் வீழ்த்தப் பட்டு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. தமிழரது பிரச்னை பற்றி எவர் பேசியிருக்கிறார்?. என்ன விவாதம் நடந்திருக்கிறது? அரசியல் தீர்வு மட்டுமே சாத்தியம் என்று கடைசி வரை சொல்லி வந்த இந்திய அரசு இப்போது எதையும் பேசுவதில்லையே ஏன்?
எல்லா வித நாடகங்களும் சிங்கள அரசியலில் அரங்கேறுகிறது. பாராளுமன்ற பெரும்பான்மை இல்லாமல் சிறிசேன – ராஜபக்சே கூட்டணி திடீர் என்று ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்து அவரது இடத்தில் ராஜபக்சேவை பிரதமர் ஆக நியமிக்கிறது. ரணில் நான்தான் பிரதமர் என்கிறார். பாராளுமன்ற சபாநாயகர் ரணிலே பிரதமர் என்கிறார். அமெரிக்கா பாராளுமன்றத்தை கூட்டி முடிவெடுங்கள் என்கிறது. இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்கிறது. சீனா சிறிசேன பக்கம் நிற்கிறது. ரணில் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பேரை சுட ஒருவர் இறக்கிறார். இத்தனை களேபரத்துக்கும் இடையில் இன்று ராஜபக்சே பிரதமர் ஆக பதவி ஏற்கிறார். அவருடன் அமைச்சரைவயும் பதவி ஏற்கிறது.
நாளை எது நடந்தால் நமக்கென்ன? எந்த சிங்களர் வந்தால் என்ன நன்மை நடக்கப் போகிறது? ரணில் தமிழர் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்படுகிறது. இதுவரை என்ன செய்திருக்கிறார்? இத்தனை ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு பற்றி பேசியிருக்கிறாரா? சிறிசேனவை விடவும் ராஜபக்சேவை விடவும் ரணில் பரவாயில்லை என்று சொல்வதில் உண்மையிருந்தாலும் அதில் என்ன ஆகப்போகிறது?
தமிழர் உரிமை மறுப்பதில் எல்லா சிங்களர்களும் ஒன்று சேர்ந்து விடுகிறார்களா இல்லையா?
இந்திய அரசுக்கு இந்திய பெரு முதலாளிகளின் முதலீடு பாதுகாப்பு முக்கியம். சீனாவுக்கு ராணுவ தளம் அமைப்பது முக்கியம். அதற்கு ராஜபக்சே உதவிக் கரம் நீட்டுகிறார் என்றால் அவர் இந்தியாவுக்கும் மோடிக்கும் நண்பராக நீடிப்பது எப்படி?
இரண்டு லட்சம் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் யாழ் தமிழர்களைப் பற்றி யார் பேசுவது? அங்கே மனிதன் சுதந்திரமாக வாழ முடிகிறதா?
மலையகத் தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக உரிமை பறிக்கப் பட்டு வாழ்ந்து வருகிறார்களே அவர்களைப் பற்றி பேச முடிகிறதா? பாவம் அவர்களின் தலைவர்கள் எந்த சிங்களர் ஆட்சிக்கு வந்தாலும் கேட்காமலேயே ஆதரவளித்து அடிமைகள் ஆகிவிடுகிறார்கள். இப்போது ராஜபக்சேவுக்கு கேட்காமலேயே ஆதரவளித்தது போல.
நாம் சொல்வது இலங்கையில் சிங்களர் சண்டை இங்கே தலைப்புசெய்தியாக ஆகக் கூடாது. ஒரு பத்திச் செய்தியாக வேண்டுமாளால் வரலாம்.
மேதகு பிரபாகரன் சொல்லி வந்தது இதுதான். சிங்களர் சண்டை போடுவதும் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் சமாதானம் பேசுவதும் உடன்படிக்கை செய்து கொள்வதும் பிற்கு அதை ரத்து செய்வதும் ஆன இந்த நாடகங்களை எத்தனை காலம் நாம் பார்த்துக் கொண்டிருப்பது என்றே அவர் சொல்லி வந்தார் /. அதனால்தான் ஆயுத போர் என்ற தீர்வுக்கான வழியை தேர்ந்தெடுத்தார்.
அது முற்றுப் பெற்ற பின் மீண்டும் அதே சிங்களர் அரசியல் நாடக காட்சிகள் அரங்கேறுகின்றன. இதையும் நாம் விவாதித்து பொழுதை கழிக்க வேண்டுமா?
இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்றானபின் அதைப்பற்றி மட்டுமே தமிழர் சிந்திக்க வேண்டும். விவாதிக்க வேண்டும்.
வடக்கு மாகாண முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் இனி தமிழர் கூட்டணியுடன் கூட்டு இல்லை என்றும் தனியாக போட்டி என்றும் அறிவிக்கிறார்.
சிங்களர் சண்டை போடும்போது தமிழர் மட்டும் ஒற்றுமையாகவா இருப்பார்கள்?
தகுதி படைத்த தமிழர் தலைவன் அறவழியில் போராடி ஈழத்தமிழர் உரிமை மீட்க தோன்றுவான் என்று எதிர்பார்த்து தமிழினம் காத்திருக்கிறது.